search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிருடன் மீட்பு"

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மணி. விவசாயியான இவரது கணவர் கிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 மாத கர்ப்பிணியான சினை பசுமாடு ஒன்றை அவரது விவசாய கிணற்றின் ஓரமாக உள்ள வயல் வரப்பில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். அங்கே புற்களை மேய்ந்த மாடு கிணற்றின் திட்டுகளில் செழிப்பாக உள்ள புற்களை மேய்வதற்காக கிணற்று திட்டிற்கு சென்றுள்ளது.

    அப்போது நிலை தடுமாறிய சினை பசுமாடு தவறி கிணற்றில் விழுந்தது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்தநிலையில் தண்ணீரில் விழுந்த பசுமாடு மேலே ஏறமுடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளது. இதையறிந்த பெண் விவசாயி அம்மணி அக்கம் பக்கத்தினரை அழைத்து பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பசு மாட்டை மீட்க முடியாத நிலையில் சினைமாடு தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி வந்தது. இதையடுத்து உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக கிணற்றில் குதித்தனர். பின்னர் பசுமாட்டை மீட்க கிணற்றில் போடப்பட்ட கயிறுகளை கொண்டு பசுமாட்டை பாதுகாப்பாக கட்டினர்.

    இதையடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கையிற்றை மேலே இழுத்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மேலே வந்த மாட்டிற்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டது. சிறுதுநேரம் படுத்தே இருந்த பசுமாடு எழுந்து நடக்க தொடங்கியது. சினை மாடு உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து பெண் விவசாயி அம்மணியும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர். தொடர்ந்து லேசான காயமடைந்த பசுமாட்டிற்கு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    கொடைக்கானலில் 700 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்பட கலைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணி (வயது 24). இவர் டால்பின் நோஸ் என்ற சுற்றுலா பகுதியின் அருகே உள்ள எதிரொலிக்கும் பாறையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வருகிறார்.

    அவர் நேற்று பகலில் ஒரு சுற்றுலா பயணிக்கு புகைப்படம் எடுக்கும்போது பாறையில் இருந்து சுமார் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இச்சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தால் உறைந்தனர்.

    இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சுமார் 700 அடி பள்ளத்தில் இறங்கி தேடி மணியை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கயிறு கட்டி மணியை மேலே கொண்டு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இச்சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    வளசரவாக்கத்தில், பிறந்து சிலமணி நேரமே ஆன நிலையில் மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை உயிருடன் மீட்ட பொதுமக்கள், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் சூட்டினர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர், 6-வது தெருவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே மழைநீர் செல்ல சிறிய அளவிலான கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

    நேற்று காலை அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு வழக்கமாக பசும்பால் கொடுக்க வரும் பால்காரர் சுப்பையா என்பவர் வந்தார். அப்போது அந்த மழைநீர் கால்வாயை சுற்றி ஏராளமான பூனைகள் நின்று கொண்டிருப்பதை கண்டார்.

    மேலும் பச்சிளம் குழந்தையின் அழுகுரலும் கேட்டதால் சந்தேகம் அடைந்த அவர், பூனைகளை விரட்டி விட்டு பார்த்தபோது, மழைநீர் கால்வாயின் உள்ளே பச்சிளம் குழந்தை தனது இரண்டு கால்களை உதைத்தபடி உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே சுப்பையா, கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு அந்த குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் கீதா என்ற பெண், தரையில் படுத்துக்கொண்டு மழைநீர் கால்வாய்க்குள் கையைவிட்டு இரண்டு கால்களையும் பிடித்து நைசாக குழந்தையை உயிருடன் வெளியே மீட்டெடுத்தார்.

    அதில், பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை என்பதும், அதன் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் குழந்தையின் கழுத்தை சுற்றியபடி இருந்தது. கழுத்தில் சுற்றி இருந்த தொப்புள் கொடியை அகற்றி, ஒரு கிளிப் போட்டனர்.

    மழைநீர் கால்வாய்க்குள் கிடந்ததால் சேறும், சகதியுமாக இருந்த குழந்தையை அந்த பகுதி பெண்கள் சுடுநீரில் குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, புதிய துணி அணிவித்தனர். பசியால் குழந்தை தொடர்ந்து கதறி அழுதபடியே இருந்தது.

    அந்த பகுதியில் இருந்த குழந்தை பெற்ற பெண்கள், கருணை உள்ளத்தோடு அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கினார். அந்த தாய்ப்பால் முழுவதையும் சேகரித்து அந்த குழந்தைக்கு வழங்கி அதன் பசியை போக்கினர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார், அந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு போரூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலன் கருதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்தனர். அந்த செய்தியை கேட்டு அந்த குழந்தையை கால்வாயில் இருந்து மீட்டெடுத்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டு உள்ளதால் அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயர் சூட்டினார்கள். அந்த குழந்தை வீசப்பட்ட பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அங்கு வேன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், பச்சிளம் குழந்தையை மழைநீர் கால்வாயில் வீசி சென்ற நபரின் உருவம் அதில் பதிவாகவில்லை.

    நேற்று காலைதான் அந்த குழந்தையை அந்த மழைநீர் கால்வாயில் வீசி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால், மழைநீருடன் குழந்தை அடித்துச்செல்லப்பட்டு விடும் என்று வீசி உள்ளனர். மேலும் குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடியால் நெரித்ததற்கான தடயமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மழைநீர் கால்வாயில் அந்த குழந்தையை வீசியது யார்?, அந்த குழந்தையின் பெற்றோர் யார்?, தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் இவ்வாறு மழைநீர் கால்வாயில் வீசினார்களா? என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து அந்த கால்வாயில் வலைகள் வைத்து அடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #PakistanAvalanche #BritishClimbers
    இஸ்லாமாபாத்:

    பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் புரூஸ் நார்மண்ட் மற்றும் டிமோதி மில்லர். இருவரும் மலையேற்ற வீரர்கள். ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் உபேர் என்ற வீரருடன் நேற்று மலையேற்ற பயிற்சிக்காக பாகிஸ்தான் வந்தனர்.

    இவர்கள் சுமார் 19,000 அடி தொலைவுள்ள ஹன்சா சமவெளியில் உள்ள அல்டார் சர் மலையில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

    அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு தகவல் கொடுத்தனர்.



    தகவலறிந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து வந்தது. அவர்கள் உதவியுடன் பனிச்சரிவில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் வீர்ர்கள் இருவரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
     
    மேலும், பனிச்சரிவில் சிக்கிய ஆஸ்திரேலிய மலையேற்ற வீரர் கிறிஸ்டியன் உபேர் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். #PakistanAvalanche #BritishClimbers
    ×